Madurai Passport Office Paridhabangal
2007 ஆம் வருடம் ஒரு சிறிய சாப்ட்வேர் கம்பெனியில் குறைந்த வருமானத்தில் வேலை பாத்துட்டு இருந்தேன்.
ஒரு நாள் கம்பெனியின் ஓனர் கூப்பிட்டு மலேசியாவில் ஒரு வேலை காலியாக உள்ளது என்றும் ஒரு வாரத்தில் சேர வேண்டும் என்னுடைய பாஸ்போர்ட்டை தரும்படி கேட்டார். எனக்கு பாஸ்போர்ட் இல்லை என்று மண்டையை சொரிய ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பாஸ்போர்ட்டுடன் வருமாறு சொல்லி அனுப்பினார்.
நமக்கெல்லாம் எப்ப வெளிநாடு வேலைவாய்ப்பு வரபோகிறது என்று சொல்லி பாஸ்போர்ட்டை எடுக்கவே இல்லை.
ஊரில் விசாரித்தபோது ஒரு ஏஜென்ட் இருக்கிறார் என்றும் 2500 ரூபாய் கொடுத்தால் உடனடியாக எடுத்து தந்து விடுவார் என்று கூறினார்கள்.
நாமெல்லாம் எப்படி நீதி டா ஞாயம் டா என்று வசனம் பேசி சொந்தமாக விசாரித்து முட்டிமோதி ஆன்லைனில் விண்ணப்பித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயின்மென்ட் வாங்கி செல்ல தயாரானேன். தட்கல் பாஸ்போர்ட் முறையில் 15 நாட்களில் கொடுத்து விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை.
அதிகாலையில் பேருந்து பிடித்து மதுரை சென்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் இறங்கினேன். அங்கு கூட்டத்தைப் பார்த்தவுடன் பகீரென்றது. ஒருவழியாக வரிசையில் நின்று பல மணி நேரங்கள் கழித்து கவுண்டரில் சர்திஃபிகேட் வெரிஃபிகேஷன் செய்பவரிடம் என்னுடைய பைலை கொடுத்தேன்.
இந்த பைலில் என்னுடைய 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் இன்ஜினியரிங் படித்து முடித்து அதற்கான சான்றிதழ்கள் என அனைத்தும் இருந்தது.
ஆனால் கல்லூரி படித்து முடித்த பின் கொடுக்கப்படும் டிசி இல்லாமல் இருந்துள்ளது. அந்த புண்ணியவானுக்கு எப்படி தெரியுமோ. கரெக்டாக டிசி இல்லையே எங்கே என்று கேட்டார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் டிசி வாங்கவே இல்லை என்று சொல்லிவிட்டேன். ஏன் வாங்கவில்லை என்று கேட்டார். நான் படித்து முடித்தவுடன் உடனடியாக வேலை கிடைத்து விட்டது அதனால் சென்னைக்கு சென்று விட்டேன் நான் கல்லூரி படித்த சான்றிதழ்கள் இருக்கிறது என்றும் அதனை பாருங்கள் என்று கூறினேன். சென்னையில் எத்தனை வருடங்கள் இருக்கிறாய் என்று கேட்டார். ஒரு ஒன்றரை வருடங்களாக இங்கு வேலை பார்க்கிறேன் என்று கூறினேன். அப்படியெல்லாம் அங்கேயே போய் பாஸ்போர்ட் வாங்கிக் கொள்ளுமாறு ஃபைலை திருப்பிக் கொடுத்துவிட்டார். என்னுடைய முகவரி ஆவணங்கள் இங்குதான் உள்ளது என்று பலமுறை கூறியும் செவிசாய்க்கவில்லை.
நீ சென்னையில் என்ன பண்றனு யாருக்கு என்ன தெரியும் என்று நான் என்னமோ சென்னையில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போன்று பேசினார்.
நானும் கடுப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இரண்டு கவுண்டர்கள் தள்ளி இந்த வரிசையில் மறுபடி நின்றுகொண்டேன்.
இரண்டு மணி நேரம் கழித்து அந்த கவுண்டர் உள்ள அதிகாரியிடம் என்னுடைய ஃபைலை கொடுத்தேன். நிமிர்ந்து என் மூஞ்சிய பார்த்தார் நான் அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த கவுண்டரை காட்டி அங்கு விரட்டிவிட்டு அதனால் தான் இங்கு வந்தாய் ஒழுங்காக போய்விடு இல்லையென்றால் உன் வாழ்நாளில் பாஸ்போர்ட் எடுக்க முடியாதபடி பண்ணி விடுவேன் என்று கூறி ஃபைலை மூஞ்சியில் எறிந்து விட்டார்.
கோபத்தில் ஊருக்கு வந்து லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது என்று நினைத்து ஊரிலுள்ள உள்ள ஏஜென்டிடம் 2500 ரூபாய் கொடுத்தேன். இரண்டு நாளில் அப்பாயின்மென்ட் கிடைத்தது ஃபைலை மூஞ்சியில் எரிந்த அதே நபர் ராஜமரியாதையுடன் உபசரித்து பல்லை இழித்துக்கொண்டு வெரிஃபைட் என்று முத்திரை போட்டு கையொப்பமிட்டார்.
இதனால் ஏற்பட்ட தாமதத்தில் என்னுடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பை இழந்ததுதான் மிச்சம்.
டிசியை தொலைத்தது என்னுடைய தவறுதான் ஆனால் அந்த அதிகாரியோ மறைமுகமாக நம்மை ஏஜென்ட் வழியாக வரவைப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ அதை பண்ணியிருக்கிறார்.
இப்போது எல்லாம் மாறிவிட்டது என்று கேள்விப்பட்டேன். ஆனால் ரொம்ப மோசமான அனுபவம் அது. அந்த வாய்ப்பு கிடைத்து வெளிநாடு சென்று இருந்தால் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு.
இதற்கு நடுவில் மாற்று டிசி வாங்க போலீஸ் ஸ்டேஷன் அலைந்தது வேற கதை.
நீங்க பாஸ்போர்ட், நான் லோன் எல்லா document இருந்தும் செல்லாது சொள்ளிடங்கங்க அதே பங்க் பட் ப்ரோக்கர் ஓட போனேன் அதே அதிகாரி அடுத்த 8 நிமிடம் லோன் approved
பதிலளிநீக்குஆமாம்.. எல்லா பக்கமும் புரோக்கர்கள் மற்றும் பணம் தான் விளையாடுகிறது...
பதிலளிநீக்கு