Jurassic Park - 1993 - சிறுவயதில் படம் பார்த்த அனுபவம்
எனக்கு இந்த படத்தை பத்தி எழுதனும்னு ரொம்ப நாளாக ஆசை. ஆனா பெரும்பாலானோர் பாத்து இருப்பாங்க . அதனால் முதன் முதலில் இந்த படத்தை பார்த்ததை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.
படம் இந்தியாவில் வந்த சமயம் 6th படித்துக் கொண்டு இருந்தேன் என நினைக்கிறேன்.அப்போது ஏது சாட்டிலைட் டீவி மற்றும் மொபைல். எந்த படமா இருந்தாலும் தியேட்டரே கதி.
ஒரு நாள் க்ளாஸ் நடந்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த என் நண்பன் காதில் மெதுவாக சொன்னான் "ஸ்கூல்ல இருந்து நாளைக்கு ஏதோ படத்துக்கு கூட்டிட்டு போறாங்களாம்டா காசு கட்டணும்னு ஒரு அமௌன்ட் சொன்னான். எவ்வளவு என்று ஞாபகம் இல்லை. என்ன படம் என்று கேட்டதற்கு "அது ஏதோ செத்து போன பயங்கரமான மிருகத்தை வச்சு எடுத்து இருக்காங்கடா என்றான். அப்ப வரைக்கும் டைனோசர் என்ற வார்த்தையை கேட்டதாக ஞாபகம் இல்லை.
செத்து போன மிருகத்தை வச்சு எப்படி படம் எடுத்து இருப்பார்கள் என்ற ஒரே எண்ணம் தான் மண்டைல ஓடிட்டு இருந்தது.
படத்தில் முதலில் வாயை பிளக்க வைத்த காட்சி அந்த ஹெலிகாப்டர் லேண்டிங். அந்த அருவி பக்கத்துல பிண்ணனி இசையோடு லேண்ட் ஆகுறப்ப ஒரு புது மாதிரியான அனுபவம் கொடுத்தது. அந்த டைம்ல பிண்ணனி இசை பத்தி எல்லாம் தெரியாது..
அடுத்து அனைவரும் பார்க்கில் உள்ளே வந்து அந்த உயரமான டைனோசரை பார்க்கும் காட்சி.
அதுவும் அது ரெண்டு காலால் எம்பி இலைய சாப்பிட்டுட்டு கீழ் காலை வைக்கிறப்ப ஒரு அதிர்வு வரும் பாருங்கள்.. செமயா இருந்தது.
அடுத்து ரொம்பவே பீதியானது அந்த மாட்டை உள்ள இறக்கி விடும் காட்சி. அந்த சவுண்ட், கடைசில வெறும் அந்த கயிறு மட்டும் வரும் காட்சி வேற லெவல். டைனோசரையே காட்டாமல் வெறும் சவுண்ட் மற்றும் புதர் அசைவதை வைத்தே நமக்கு எப்படி பயத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் ஸ்பீல்பெர்க் என இப்ப நினைப்பது உண்டு .
கொஞ்சம் கொஞ்சமாக பயத்தை ஏற்படுத்தி T-Rex வரும் காட்சி பயத்தின் உச்சகட்டம்.
அதுவும் கண்ணாடி டம்ளர்ல அந்த வைப்ரேஷன் உடன் டம் டம்னு டைனோசர் நடக்கும் சவுண்ட் வருமே.. செம பில்டப் சீன் அது எல்லாம்.
அடுத்து அந்த ஆட்டுக்கால் வந்து கார் ஜன்னலில் விழும் அந்த காட்சியில் ஜெர்க் ஆனது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு.
T-Rex காரை பிரிச்சு மேயுறது எல்லாம் செமயான காட்சி அமைப்பு பயம் , ஆச்சரியம் அந்த பிள்ளைகள் ரெண்டும் இவ்வளவு கொடூரமான மிருகத்திடம் எப்படி தப்பிப்பார்கள் என்ற பதட்டம் ...ப்பபா என்ன மாதிரியான ஒரு சீன் அது.
அடுத்து கொஞ்சம் லைட்டா அந்த சைவ டைனோசர் வரும் காட்சிகள் நல்லா ஜாலியா இருக்கும்.
அடுத்து சில நிமிடங்களில் அந்த Fence பவர் ஆன் செய்யும் காட்சி இதயத்துடிப்பை எகிற வைத்த ஒன்று.
அப்பாடா ஒரு வழியா ஒன்னு சேர்ந்துட்டாங்க எல்லாரும் அப்படினு நினைக்கிறப்ப.
அந்த பையன் ஜெல்லி சாப்பிடும் போது ஒரு effect கொடுப்பார்கள் நல்லா இருக்கும்.
அடுத்து படத்தோட பெரிய ஹைலைட் அந்த கிச்சன் சீன். அதுவும் அந்த பிம்பம் தெரியும் அலமாரி குளோஸ் பண்ணும் ஒரு நொடி முன்னாடி கூட அச்சோ அந்த பொண்ணு செத்துச்சு போலனு நினைக்க வச்சுருவாங்க.
கம்ப்யூட்டர் வைச்சு கதவ எல்லாம் மூடலாம் போலன்னு அப்ப தான் தெரிஞ்சது.
இது எல்லாம் போக அந்த வில்லன் மூஞ்சில விஷம் அடிக்கும் காட்சி , குருப்பா வெஜ் டைனோசர்கள் ஓடி வருவது என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு காட்சியில் டைனோசர் காரை துரத்திட்டு வரும் அது ரியர்வியூ கண்ணாடியில் காமித்து இருப்பார்கள். அப்ப அந்த கண்ணாடியில் "Objects in the mirrors are closer than they appear" னு எழுதி இருக்கும். நீங்க நினைக்கிறத விட டைனோசர் பக்கத்துல தாண்டா ஓடி வந்துட்டு இருக்குனு சொல்ற மாதிரி இருக்கும்.
எத்தனை தடவ இந்த படத்தை பார்த்து இருப்பேன் என்று தெரியாது. ஆனால் இன்னும் எத்தனை தடவ போட்டாலும் பார்ப்பேன். Re master பண்ணி 3D ல கூட விடலாம். தியேட்டர்ல போய் பார்க்கவும் ரெடி.
இதை தவிர்த்து மூஞ்சில ஒரு திரவத்தை அடிச்சு வில்லனை கொல்லும் அந்த குட்டி டைனோசர், ஆள் இல்லாமல் ஒடும் கார் என எல்லாமே செமயா இருக்கும்.
சினிமா வரலாற்றில் இந்த படம் ரொம்பவே முக்கியமான ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த படத்தை பற்றிய உங்களுடைய அனுபவங்களையும் சொல்லுங்க 😊
இந்த படம் மாதிரி ரொம்ப நாளாக எழுதனும்னு ஆசைப்பட்டு 25 வருஷம் ஆனதுக்காக Speed படத்துக்கு எழுதுன போஸ்ட் 25 Years Of Speed
கருத்துகள்
கருத்துரையிடுக