Dark
மொத்தம் 3 சீசன்கள், 26 எபிஸோடுகள் மட்டுமே கொண்ட ஒரு ஜெர்மன் த்ரில்லர் சீரியல். வழக்கமான சீரியல்கள் போல, அனைத்து சீஸன்களையும் ஒரே மூச்சில் பார்த்துவிட முடியாது. ஏனென்றால் கதை அந்த அளவிற்கு புதிராக இருக்கும்.
கதை ஜெர்மனில் உள்ள விண்டன் நகரையும், அங்கே உள்ள அணு உலை பின்னே இருக்கும் குகையையும் மையப்படுத்தி நகர்கிறது. சமீபத்தில் ஒரு சிறுவன் காணாமல் போனதால் ஊரே பரபரப்பாக இருக்கும் போது, போலீஸ் அதிகாரி Ulrich-ன் கடைக்குட்டி மகன் Mikkel-லும் மர்மமான முறையில் காணாமல் போகிறான். ஊரில் உள்ள முதியவர் Helge, 33 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போலவே இப்போதும் நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என தனக்கு தானே புலம்பிக்கொண்டு அலைகிறார். அவர் யாரை தடுக்க வேண்டும் என்று சொல்கிறார் என யாருக்கும் புரியவில்லை. ஆனால் 33 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுவர்களில் Ulrich-ன் சகோதரன் Mads-ம் ஒருவன். அன்று சகோதரன், இன்று மகன். இருவரும் ஒரே மாதிரி காணாமல் போனதின் மர்மத்தை அலசி ஆராய்கிறார் Ulrich.
மற்றொரு புறம், தூக்கில் தொங்கி இறந்து போன தன் தந்தையை எண்ணி வருந்திக்கொண்டிருக்கும் Jonas-இடம் ஒரு மர்ம மனிதன் வந்து ஒரு பார்சலை கொடுக்கிறான். அதில் அணுஉலைக்கு பின்னால் இருக்கும் குகைக்குள் செல்ல தேவையான Light, Map போன்ற பொருட்கள் இருக்கின்றன. Jonas குகைக்குள் செல்ல தயராகிறான். குகைக்குள் ஒன்றன்பின் ஒன்றாக பல இரும்புக் கதவுகளை தாண்டி செல்லும் Jonas, உள்ளே சென்ற அதே வழியாக மீண்டும் வெளியேறுகிறான்.
ஊருக்குள் செல்லும் அவனுக்கு ஒரே அதிர்ச்சி. தன்னுடைய வழக்கமான ஊராக இல்லாமல் பல விஷயங்கள் அங்கே மாறியிருப்பதை காண்கிறான். அவனின் பள்ளிக்கு சென்றால் அங்கே அடையாளம் தெரியாமல் அனைவருமே புதுமுகங்கள். பின்பு தான் அவனுக்கு புரிகிறது, அவன் Time Travelல் பயணம் செய்து 1986ஆம் ஆண்டில் இறங்கி இருக்கிறான் என்று.
1986ஆம் ஆண்டில் இருக்கும் Jonas, அங்கே எதேச்சையாக காணாமல் போன சிறுவன் Mikkel-ஐ பார்க்கிறான். 2019ல் காணாமல் போன சிறுவன் இங்கே எப்படி வந்தான்? ஒரு வேளை இவனை கூட்டி செல்ல தான் நம்மை இங்கே அனுப்பி வைத்தானா அந்த மர்ம மனிதன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே பின்னால் இருந்து ஒரு கை இவனை அழைக்கிறது. அங்கே மர்ம மனிதன் நிற்கிறான்.
அவன் மேலும் சில விஷயங்களை விளக்குகிறான். அதாவது,
2019ஆம் ஆண்டு தொலைந்து போய், 1986ல் வந்து அனாதையாக மாட்டிக்கொண்ட Mikkel தான், 2019ஆம் ஆண்டில் சமீபத்தில் இறந்து போன Jonas-ன் தந்தை Micheal என்றும் இப்போது Jonas, Mikkel-ஐ 2019க்கு அழைத்து சென்றுவிட்டால் Michael என்ற நபர் வாழ்ந்திருக்கவே மாட்டார், அதனால் Jonas என்ற நபர் பிறந்திருக்கவே மாட்டார் என்றும் எச்சரிக்கிறான்.
மீண்டும் 2019ஆம் ஆண்டுக்கு திரும்பி வரும் Jonas, எப்படியாவது தன் இறந்து போன தந்தையை தற்கொலையில் இருந்து தடுத்து நிறுத்த முடியுமா என முயற்சி செய்கிறான்.
Jonas தன் தந்தையை காப்பாற்றினானா?
Mikkel-ஐ தேடி Ulrich அலையும் போது, வேறொரு சிறுவனின் உடல் கிடைக்கிறது. அவனின் உடைகள், அடையாளங்களை பார்க்கும் போது 1980களின் சாயல் தெரிகிறது. யார் என்ற அடையாளமும் எளிதாக புலப்படவில்லை. சில அடையாளங்களின் மூலம் அது தன் உடன் பிறந்த சகோதரன் Mads-ன் உடலாக இருக்கலாம் என்றும், அவன் காணாமல் போனதற்கு முதியவர் Helge காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டு அவரை தேடி செல்கிறான். Helge அந்த சமயத்தில் நேரே குகைக்குள் செல்ல, Ulrich-ம் அவரை பின் தொடர்ந்து செல்கிறான். குகைக்குள் இருவரும் Jonas சென்றது போலவே பல கதவுகளை தாண்டி செல்கிறார்கள். ஒரு இடத்தில் இரு பாதைகள் பிரிய, Helge செல்லும் பாதை அவரை 1986ஆம் ஆண்டுக்கு எடுத்து செல்கிறது ஆனால் Ulrich வேறு பாதையை தேர்ந்தெடுக்க அது அவனை 1952ஆம் ஆண்டுக்கு இழுத்து செல்கிறது.
1986ஆம் ஆண்டில், Black Hole சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்காக சிறுவர்களை கடத்துவது தான் Helge-வின் வேலை. 1986ஆம் ஆண்டுக்கு சென்ற முதியவர் Helge அப்போதைய வாலிப வயது Helge-வை தடுக்க முயல்கிறார். ஆனால் பேச்சுவார்த்தை பயனளிக்காததால், அவனை கொலை செய்ய முயல்கிறார். அதாவது Helge, 2019ஆம் ஆண்டில் இருந்து, 1986ஆம் ஆண்டுக்கு சென்று தன்னை தானே கொல்ல நினைக்கிறார்.
1952ஆம் ஆண்டுக்கு சென்ற Ulrich, அங்கே Helgeவை சிறுவனாக பார்க்கிறான். அவனை அந்த காலகட்டத்திலேயே கொன்றுவிட்டால், 1986ல் தன் சகோதரனும், 2019ல் தன் மகனும் காணாமல் போயிருக்க மாட்டார்கள் என்று நினைத்து, சிறுவனாக இருக்கும் Helge-வை கொல்ல முயல்கிறான்.
Helge-வை கொல்ல நினைத்த முயற்சி என்ன ஆனது? கடந்த கால நிகழ்வை மாற்றியதன் மூலம், நிகழ்காலம் மாறியதா?
இதே போல Martha, Hannah, Claudia, Kathrina, Egon என மேலும் சில கதாபாத்திரங்கள் புதுப்புது கதையோடு உள்ளே வந்து சர்வ சாதாரணமாக இங்கும் அங்கும் Time Travel செய்வது நமக்கு ஏதோ இடியாப்ப சிக்கல் போல தெரியும். ஆனால் தெளிவாக கவனித்து பார்த்தால் எவ்வளவு நேர்த்தியாக கதையை செதுக்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.
அனைத்து கதாபாத்திரங்களையும் பற்றி விரிவாகசொல்ல இந்த இடம் போதாது. அனைத்தையும் கூறிவிட்டால் சீரியல் பார்க்கும் போது உங்களுக்கு பரபரப்பும் குறைந்துவிடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூற முடியும். இந்த சீரியல் உங்களை தூங்கவிடாது. யோசிக்க வைக்கும்.
ஒவ்வொரு Episode-லும் கதையை தெளிவாக கவனிக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் முக்கியமான பல விஷயங்களை தவற விட்டுவிடுவீர்கள்.
உங்களுக்கு புதிர் பிடிக்கும் என்றால், இந்த சீரியல் நிச்சயம் பிடிக்கும். உங்களில் அறிவுக்கு தீனி போடும் இந்த சீரியல்.
நிச்சயம் பாருங்கள், ஆனால் பொறுமையாக பாருங்கள்.
Netflix - ல் மட்டுமே கிடைக்கிறது.
IMDB Rating - 8.8
ரொம்ப குழப்பமா இருக்கும் போல்....
பதிலளிநீக்கு