அன்பிலீவபல் (Unbelievable) - 2019
தனிமையில் இருக்கும் பெண்களை தேடிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஒரு கற்பழிப்பு குற்றவாளியை இரு பெண் காவல் அதிகாரிகள் தங்களுடைய புத்திசாலித்தனமான விசாரணையால் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதை பற்றிய தொடர்.
தொடரின் முதல் காட்சியிலேயே இரவில் இளம் பெண் மேரி கற்பழிக்கப்படுகிறாள். மறுநாள் காலையில் போலீஸ் வந்து விசாரணையில் இறங்குகிறது. ஆனால் கற்பழிப்பு நடந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை.
விசாரணையில் மேரி ஒரு அனாதை என்றும் பல்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வளர்ந்தவள் என்றும் தெரியவருகிறது. மேலும் அவர் ஒரு நிலையான மன நிலையில் இல்லை என்பதும் தெரிய வருகிறது. இதனடிப்படையில் மேரி கற்பனையில் பிறந்த கதை என்று சொல்லி வழக்கை முடித்துவிடுகிறார்கள்.
இரண்டு வருடங்கள் கழித்து மற்றொரு பெண் தான் கற்பழிக்கப்பட்டது புகார் அளிக்கிறார். ஆனால் இம்முறை ஒரு திறமையான பெண் அதிகாரி (Karaen Duvall) விசாரணையில் இறங்குகிறார். விசாரணையின்போது பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவருகிறது. வழக்கு விசாரணையின் போது மற்றொரு மூத்த பெண் அதிகாரி (Grace)ஐ சந்திக்கிறார்.
அவர் விசாரணை செய்யும் வழக்கு தன்னுடைய வழக்கில் ஒத்துப்போவதை கண்டுபிடிக்கிறார். இருவரும் இணைந்து தொடர் கற்பழிப்பு செய்யும் குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகின்றனர்.
இருவரும் சேர்ந்து குற்றவாளியைக் கண்டு பிடித்தார்களா? குற்றவாளி எவ்வாறு தடயங்கள் இல்லாமல் தப்பித்தான்? மேரிக்கு நியாயம் கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக தொடர் செல்கிறது.
திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளது. அனைத்து நடிகர் நடிகைகள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மொத்தம் 8 மணிநேரம் கொண்ட தொடர் முழுவதும் எங்குமே தொய்வில்லாமல் செல்கிறது.
இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் இணைந்து செய்யும் விசாரணைகளும் அவர்களின் பல்வேறு கோணங்களும் நம்மை பிரமிப்படைய வைக்கின்றன. போலீஸ் அதிகாரிகளின் விசாரணை முறைகளை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளார்.
கற்பழிப்பு குற்றவாளிகளின் மனநிலை மற்றும் அவர்களை பிடிக்க போலீசார் எதிர்கொள்ளும் சவால்களை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது இந்த தொடர்.
குறிப்பாக குற்றவாளியை பிடித்த பின் அவன் முதல் கற்பழிப்பு நடந்த போதே தன்னை கண்டுபிடித்து இருக்கலாம் என்று சிஸ்டத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி போலீசார்க்கு வகுப்பு எடுப்பது வேற லெவல்.
துப்பறியும் கதை பிடித்தவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய தொடர் இது.
நெட்பிளிக்ஸ்ஸில் உள்ளது:
கருத்துகள்
கருத்துரையிடுக