Parasite


ஃபாரசைட் - Parasite


பல ஆஸ்கர் விருதுகளை வென்ற கொரியன் திரைப்படம். 

நான்கு பேர் மட்டுமே வசிக்கும் பெரிய பங்களா. அங்கே உள்ள இளம்பெண்ணுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க உள்ளே நுழைகிறான் Kim. 

வீட்டின் எஜமானி எதை சொன்னாலும் நம்பும் அப்பாவி என்பதை புரிந்து கொண்டு தன் தாய், தந்தை மற்றும் சகோதரி என அனைவரையும் உள்ளே வேலைக்கு சேர்க்க திட்டமிடுகிறான். 


"உங்கள் மகனுக்கு சில உளவியல் கோளாறுகள் உள்ளது, அதை சரி செய்ய எனக்கு தெரிந்த ஒரு நபர் இருக்கிறார்" என்று கூறி தன் சகோதரியை உள்ளே கொண்டு வருகிறான். 

புதிதாக உள்ளே நுழைந்த சகோதரி, கார் டிரைவரை ஒரு சிக்கலில் மாட்டிவிட்டு அந்த இடத்திற்கு தன் தந்தையை கொண்டு வருகிறாள். 

கடைசியாக மூவரும் சேர்ந்து வீட்டின் வேலைக்காரியையும்  வெளியே துரத்தி விட, அந்த இடத்திற்கு தாய் வேலைக்கு வருகிறாள்.

ஆக அம்மா, அப்பா, மகன் மற்றும் மகள் என நால்வரும் ஒரே குடும்பம் என்ற உண்மையை மறைத்து திட்டம் போட்டு பங்களாவில் வேலைக்கு சேர்கிறார்கள்.

ஒரு நாள், வீட்டின் எஜமானர்கள் அனைவரும் பிக்னிக் சென்ற தருணம். நால்வரும் பங்களாவில் ஒன்று கூடி குடித்துக்கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேசுகிறார்கள்.
வாழ்நாள் முழுக்க ஏழ்மையிலே வாழ்ந்த நாம், இனிமேல் இந்த வீட்டில் ஒட்டுண்ணி போல ஒட்டிக்கொண்டு ஒய்யாரமாக வாழலாம் என்று முடிவெடுக்கும் போது அங்கே ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.

வீட்டின் முன்னாள் வேலைக்காரி, கொட்டும் மழையில் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டு பரிதாபமாக நிற்கிறாள். தான் ஒரு முக்கியமான ஒன்றை மறந்து வைத்து விட்டதாகவும் அதை எடுத்து செல்ல அனுமதி அளிக்கும்படியும் கெஞ்சுகிறாள். 

உள்ளே அனுமதித்ததும் அவள் வேகமாக ஓட, அவளை பின் தொடர்ந்து சென்று பார்க்கும் புதிய வேலைகாரிக்கு அதிர்ச்சி. பங்களாவின் கிழே இருக்கும் பதுங்கு குழியில் தன் கணவனை நான்கு வருடமாக யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்து பராமரித்து வந்திருக்கிறாள் அவள். 

இதை நான் உடனே எஜமானியிடம் சொல்லப்போகிறேன் என்றதும், நாம்
இருவருமே ஏழைகள் எனவே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யலாம். தயவுசெய்து இவருக்கு வாரம் ஒரு முறை சாப்பாடு மட்டும் கொடுங்கள், அது போதும் என கெஞ்சுகிறாள். 

புது வேலைக்காரியோ பிடிவாதமாக இருக்க, அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த மற்ற மூவரும் அங்கே தடுமாறி விழுந்து மாட்டிக்கொள்கிறார்கள். இவர்கள் நால்வரும் ஒரே குடும்பம் என்பதை அவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு உதவுங்கள் இல்லையேல் உங்களின் பித்தலாட்டத்தை எஜமானியிடம் சொல்லி விடுவேன் என்று பதிலுக்கு மிரட்டுகிறாள் முன்னாள் வேலைக்காரி. 

இப்படி இவர்களுக்குள் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போதே, பிக்னிக் சென்ற குடும்பம் பெருமழை காரணமாக வீடு திரும்புகிறது. அனைவரும் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ள அங்கிருந்து எப்படி தப்பித்தார்கள், அடுத்து என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை. 

மிகவும் எதார்த்தமாகவும் அதே சமயம் பரபரப்பாகவும் செல்கிறது படம். படத்தின் சில காட்சிகள் ஏழை-பணக்காரன் இடையே உள்ள பாகுப்பாட்டையும் அதன் உளவியல் தாக்கங்களையும் கொஞ்சம் மிரட்சியுடன் சொல்கிறது.

Amazon Prime-ல் ஹிந்தி கொரியன் என இரண்டு மொழிகளில் உள்ளது. ஹிந்தியில் பார்த்தால் நமக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்